காடை (Quail)![]() நாட்டுக் காடை (Common quail, Coturnix coturnix) ஐரோப்பா, ஆசிய மற்றும் ஆஃப்ரிக்கக் கண்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இவை முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும், உலகின் பல பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இவை சிறிய (17 செ.மீ.) உருண்டையான வடிவத்துடன் காணப்படுகின்றன. மரப்பழுப்புக் கோடுகள் கொண்ட இறகுகளுடன், கண்ணருகே வெள்ளை நிறப் பட்டையுடனும், ஆண் பறவைகள் கருத்த தாடையுடனும் காணப்படுகின்றன. இது விதைகளையும், பூச்சிகளையும் உண்ணும் நிலம்வாழ் இனமாகும். இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படும், அதிகம் பறக்க இயலாத தரைப்பறவை என்றால் அது ‘ஜப்பானிய காடை’தான். இதன் அறிவியல் பெயர் கட்டூர்னிக்ஸ் ஜப்பானிக்கா (Coturnix japonica). நாடு முழுவதும் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் ஜப்பானிய காடை வளர்ப்புத் தொழில் நடைபெறுகிறது. இது தீவிரமான நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்ட பறவை. எல்லா பருவகாலச் சூழல்களிலும் நன்கு வளரும் இந்த ஜப்பானிய காடையின் இறைச்சியும் முட்டையும் சுவையானது மட்டுமின்றி சத்துகள் நிறைந்த உணவாகவும் இருக்கிறது. இதனை வளர்க்க மிகக் குறைந்த அளவிலான இட வசதி போதுமானது. ஒரு கோழிக்கான இடத்தில் நான்கு, ஐந்து காடைகளை எளிதாக வளர்க்கலாம். வளர்ந்த காடை ஒன்று 150 - 200 கிராம் உடல் எடையைக் கொண்டது. முட்டை ஒன்று, 7 - 15 கிராம் எடையை உடையது. 6 - 7 வார வயதில் பெண் காடை, முட்டை இடத் துவங்கி தினசரி முட்டையிடும். முதல் ஆண்டில் சுமார் 300 முட்டைகளும், இரண்டாம் ஆண்டில் 150 - 175 முட்டைகளும் இடும். காடை முட்டை, மனித உணவுக்கு மிகவும் ஏற்றது. கோழி முட்டையைவிட 2.47 சதவீதம் குறைந்த கொழுப்பை உடைய காடை முட்டை, அழகான தோற்றத்தையும் பல வண்ணங்களையும் உடையது. அடை காக்கப்படும் முட்டைகளில் இருந்து 17-வது நாளில் குஞ்சுகள் வெளிவரும். குஞ்சுகள் 6 முதல் 7 கிராம் எடை இருக்கும். ஆண் காடையின் உடல் எடை 140 கிராம் வரும்போது, பெண் காடையின் எடை 180 கிராம் அளவுக்கு வந்துவிடும். கோழி போன்ற இதர வீட்டுப் பறவைகளை விட ஜப்பானிய காடையின் வளர்ச்சி 3.5 மடங்கு விரைவானது. ஜப்பானிய காடை தன் உடல் எடையில் 70% இறைச்சியைக் கொடுக்கும். தொடையும் நெஞ்சுப் பகுதியுமே 68% இறைச்சியைக் கொடுக்கும். காடை இறைச்சியில் புரதச்சத்து மிக அதிகமாக இருக்கிறது. நம் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு எலும்புகளை வலுவாக்குகிறது. குருத்தெலும்புகளை பலப்படுத்துகிறது. 100 கி காடை இறைச்சியில் 22 கி அளவுக்கு புரதம் இருக்கிறது. இது பிற இறைச்சிகளில் உள்ள புரதத்தை விட அதிகம். மற்ற சிவப்பு இறைச்சி வகைகளை விட காடை இறைச்சியில் கொலஸ்டிரால் அளவு மிகக் குறைவு. அதனால் ரத்த அழுத்தம் உடையவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் உடல் எடை மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இந்த காடை இறைச்சியை உங்கடைய டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். காடை இறைச்சியில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், ஜிங்க், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. அதிக அளவு பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது இதய நோய்கள் வராமல் தடுக்க உதவும். காடை குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு தான். 100 கிராம் சமைத்த காடை இறைச்சியில் 275 கலோரிகள் உள்ளன. ஒரு காடை முட்டையில் 14 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதில் 1 கிராம் அளவு புரதம் இருக்கிறது. ஆனால் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. அதில் சற்று கூடுதலாக கொலஸ்டிரால் இருக்கிறது. |