துறைமுகம் சட்டமன்றத் தொகுதி (Harbour Assembly Constituency) |
துறைமுகம் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பூங்கா நகர், பெரம்பூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தொகுதி எண் 18. தமிழ்நாடு உருவாகுவதற்கு முன்பே அதாவது 1951-ம் ஆண்டே துறைமுகம் தொகுதி இருந்தது. இந்த தொகுதியில்தான் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை உயர்நீதிமன்றம், சென்ட்ரல் ரயில் நிலையம், துறைமுகம், பாரிமுனை, உயர் நீதிமன்றம், அரசு சட்டக்கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவ கல்லூரி ஆகியவை வருகின்றன. வியாபாரிகளும், வணிகமும் பரபரப்பாக நடக்கக் கூடிய தொகுதி. அதனால் பணப்புழக்கமும் அதிகம் உள்ள தொகுதி. மளிகைப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள், பட்டாசு, அழைப்பிதழ்கள், காலண்டர்கள், பிளாஸ்டிக் பொருள்களுடன் தங்கமும், வைரமும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. தென் சென்னையின் முக்கிய அடையாளமாகக் கருதப்படும் சௌக்கார்பேட்டையும் இந்த தொகுதியில் வருகிறது. இந்த தொகுதியில் சிறுபான்மையினர் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தங்கியிருக்கும் கூலித்தொழிலாளர்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்களும் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். அதனால் உழைப்பாளர்களின் நகரம் எனவும், கருப்பர் நகரம் எனவும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த துறைமுகம் தொகுதியில் 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸும், அதற்குப் பிறகு நடந்த 1967, 1971 ஆகிய தேர்தல்களில் சுயேட்சையும் வென்றன. 1977-ல் திமுக துறைமுகம் தொகுதியைக் கைப்பற்றியது. அப்போதிலிருந்து 2021 தேர்தல் வரை 10 முறை வென்று தி.மு.க-வின் கோட்டையாகவே மாறியிருக்கிறது துறைமுகம் தொகுதி. தி.மு.க-வைச் சேர்ந்த ஏ.செல்வராஜ் 4 முறையும், க. அன்பழகன் 3 முறையும், கலைஞர் கருணாநிதி 2 முறையும், சேகர்பாபு 2 முறையும் இத்தொகுதியில் வெற்றிப்பெற்று இருக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||