ஆவடி சட்டமன்றத் தொகுதி (Avadi Assembly Constituency) |
ஆவடி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இதன் தொகுதி எண் 6. ஆவடி தொகுதி 1976 வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அடங்கியிருந்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி தொகுதி 2011 தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்டது. ஆவடி நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி, திருவேற்காடு பேரூராட்சி மற்றும் பூந்தமல்லி வட்டம் நடுகுத்தகை, நெமிலிச்சேரி மற்றும் கருணாகரச்சேரி கிராமங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. புகழ்பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. இது தவிர ராணுவ தளவாடங்களான பீரங்கிகளை தயாரிக்கும் டாங்கி தொழிற்சாலை, ராணுவ வீரர்களுக்கான ஆடைகள் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் குளோத்திங் பேக்டரி போன்ற மத்திய அரசின் தொழிற்சாலைகளின் கேந்திரமாக திகழ்கிறது ஆவடி தொகுதி. தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளன. மேலும், ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், டாட்டா ஸ்டீல், டி.ஐ. சைக்கிள்ஸ், முருகப்பா குரூப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆவடி தொகுதியைச் சுற்றி அய்யப்பாக்கம் ஏரி, பருத்திப்பட்டு ஏரி, திருநின்றவூர் ஏரி, கொரட்டூர் ஏரி, புழல் ஏரி ஆகிய நீர் நிலைகள் உள்ளன. ஆவடி தொகுதியில் இதுவரை 3 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அ.தி.மு.க-வும் 2021 தேர்தலில் திமுக-வும் வென்றுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||