காகம் (Crow)


nilgiri tahr
காகம் அல்லது காக்கை கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். காகங்களில் 40 இனங்கள் உள்ளன. இது மக்கள் வாழும் இடங்களில் அவர்கள் வெளியிடும் குப்பைகளையும், மற்றைய வீண் பொருட்களையும் உண்டு வாழ்கிறது.

காகங்களில் ஆஸ்திரேலிய காகம், வட அமெரிக்க காகம், ஆபிரிக்க காகம், ஐரோப்பிய காகம், ஆசிய காகம் என இனங்கள் பல உள்ளன. கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியன ஆசியக் காக இனங்களாகும்.

காக்கைகள் எந்தப் பருவ நிலை உள்ள கண்டங்களிலும் வாழும் திறன் பெற்றவை. தென் அமெரிக்கா மற்றும் பெருங்கடல்களுக்கு அப்பால் காணப்படும் சிறு தீவுகளைத் தவிர உலகெங்கும் காக்கைகள் காணப்படுகின்றன.

மத்திய ஆசியாவில் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் காகங்கள் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

பறவைகளில் அதிக அறிவுத் திறன் பெற்ற பறவை காகம் ஆகும். விலங்கினங்களிலேயே வாலில்லாக் குரங்குகளைத் தவிர காகங்கள் மட்டுமே சிறு பொருள்களைக் கொண்டு கருவிகளை வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

மரங்களில் வாழும் காகங்கள் பொதுவாகக் 20 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை. பெண் காகங்கள் மூன்று வருடங்களிலும் ஆண் காகங்கள் ஐந்து வயதில் பருவத்தை அடைந்து விடுகின்றன. காகம் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.

காகங்கள் சேர்ந்திருக்கும் போது ஒரு காகம் மற்றொரு காகத்தின் அலகு, உடல் போன்ற பகுதிகளில் உள்ள கடினமான ஓடு உடைய பேன்களைச் சுத்தம் செய்யும். இச்செயல் ஆண் காகங்களுக்கும், பெண் காகங்களுக்கும் இடையேயான ஓர் ஈர்ப்பு நிகழ்வாகும்.

காக்கைகள் பொதுவாக அனைத்துண்ணிகள் ஆகும். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு போன்றவற்றையும் உண்ணும். வயல்களில் உள்ள பூச்சிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நண்பன் எனப்படுகிறது. இறந்த உடல்களையும் தின்னும்.

காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவர் என்பது தமிழர் நம்பிக்கை ஆகும். காகங்களைப் பற்றி எழுதப்பட்ட 'கில்காமேஷ்' என்ற நூல் உலகின் பழைமையான இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

திபெத்திய கலாச்சாரத்தில் 'தருமபாலா' பூமியில் எடுத்துள்ள அவதாரங்களில் ஒன்றாகக் காகம் கருதப்படுகிறது. ஐரிஷ் புராணங்களின்படி காகங்கள் போர் மற்றும் இறப்பிற்கான 'மாரிகின்' என்ற கடவுளாகக் கருதப்படுகிறது.

இந்து மத நம்பிக்கையின்படி காகங்கள் மூதாதையரின் வடிவமாகக் கருதப்படுகிறது. அதனால் சிறப்பு நாள்களில் அமாவாசை, திதி, தீபாவளி போன்ற நாள்களில் முதலில் காக்கைக்கு உணவு படைக்கப்படுகிறது. காகங்கள், நமக்கு வரும் நன்மை தீமைகளை, தனது செயல்பாடுகளால் எச்சரிக்கை செய்கிறது.

தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால், அனைத்துக் காக்கைகளும் ஒன்று கூடிக் கரையும். இது இறந்த காக்கைக்கு அஞ்சலி செய்வதற்கு சமமாகக் கருதப்படுகிறது.

காகங்கள், நமக்கு வரும் நன்மை தீமைகளை, தனது செயல்பாடுகளால் எச்சரிக்கை செய்கிறது. காகம் ஒருவருடைய வாகனம், குடை, காலணி அல்லது உடலின் மீது தனது சிறகால் தீண்டினால் அவர்களுக்கு அகால மரணம் ஏற்படும்.

தாங்கள் எங்காவது பயணம் செல்லும்பொழுது உங்கள் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் தங்களுடைய பயணத்தை தவிர்க்க வேண்டும். நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும்.

காகம் இன்னொரு காகத்திற்கு உணவு பகிரும் காட்சியினை பார்ப்பது மிகவும் இனிமையான செயலை குறிக்கின்ற சகுனமாகும். காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.

காகம் பூக்கள், பழங்கள், ஏதாவது ரத்தினக் கற்களை தங்கள் வீட்டில் போட்டுவிட்டு சென்றால் அவர்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண் குழந்தை பிறக்கும்.

சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்களைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும். காகம் நம் எதிரில் வலமிருந்து இடது பறந்து சென்றால் லாபமும், இடமிருந்து வலம் பறந்து சென்றால் நஷ்டமும் உண்டாகும்.

காகம் தங்கள் வீட்டில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி கத்தினால் தங்க லாபம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். காகம் தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால் தயிர், எண்ணெய் மற்றும் உணவு அல்லது உணவு சம்பந்தமான பொருட்களில் லாபம் கிடைக்கும்.

மேற்கு நோக்கி காகம் கரைகிறது என்றால் மது, நெல், முத்து, பவளம் மற்றும் கடல்விளை பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். வடக்கு திசையை நோக்கி காகம் கரைகின்றது என்றால் ஆடைகள் அல்லது ஏதாவது ஒரு வாகனம் வாங்கப்போகின்றீர்கள் என்ற சகுனமாகும்.