ஒட்டகம் (Camel)


nilgiri tahr
ஒட்டகம் பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். இவை 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன. ஒட்டகங்கள் ‘பாலைவனக் கப்பல்’ என்று அழைக்கப் படுகின்றன.

ஒட்டகத்தின் 4-5 நாட்கள் வரை நீர் அருந்தாமல் பாலை நிலப் பகுதிகளில் வாழக் கூடியது. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக் கூடியது. ஒட்டகங்கள் மிகச் சிறிய அளவு சிறுநீரை மட்டுமே வெளியேற்றுகின்றன. அவற்றின் சாணம் வறண்டு இருக்கும்.

ஒட்டகம் தன் முதுகின் பின்புறம் உள்ள திமில் பகுதியில் கொழுப்பைச் சேமித்து வைத்துக் கொள்ளும். அவசரக் காலத்தில், ஒட்டகம் கொழுப்பைச் சிதைத்து உயிர்வாழத் தேவையான ஆற்றலாகவும், நீராகவும் மாற்றிக் கொள்ளும். திமில் பகுதி கொழுப்பு வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு போர்வையாகச் செயல் படுகிறது.

ஒட்டகங்கள் மென்மையான மணலில் எளிதாக நடக்க உதவும் பெரிய தட்டையான பாதங்களைக் கொண்டுள்ளன. இந்த தட்டையான பாதங்கள் உடல் எடை மற்றும் அது சுமக்கும் எடைக்கு எதிராக மணலில் மூழ்குவதை தடுத்து உதவுகின்றன. மணலின் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கின்றன.

ஒட்டகம் நீர் அருந்தும் பொழுது ஏறத்தாழ 100 லிட்டர் நீரை அருந்தும். அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் அதன் உடலில் நீர்ப்பதம் ஏறி விடுகின்றது. இதன் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.

கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்ப நிலையை 34 செல்சியஸ் முதல் 41 செல்சியஸ் (93-106 ஃபாரன்ஹீட்) தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப் பிடிக்கும்.

ஒட்டகம் ஏறத்தாழ 200 கிலோ எடையைச் சுமந்து கொண்டு ஒரு நாளைக்கு 50 கி.மீ. தொலைவு நடக்கக் கூடியது. சிறுதொலைவு ஓட்டம் ஒன்றை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடி முடிக்கக் கூடியது. சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும்.

ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும்.

குட்டி போட்டு பாலூட்டும் மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். இந்த சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 2.4 மடங்கு விரிந்து தண்ணீருக்கு இடமளிக்கிறது.

பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்ளும். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்தால் மூக்கால் மோப்பமிட்டு நீரின் இருப்பிடத்தை அறியும்.

ஒட்டகப் பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவு. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகம் உள்ளது. பசும் பாலை விட கொழுப்பு, லாக்டோஸ் குறைந்த அளவும் பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது.

ஒற்றைத்திமில் ஒட்டகம் கி.மு 4000 ஆண்டளவில் வளர்ப்பு விலங்காக ஆனது. ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, பாக்ட்ரியா என்ற பகுதியில் கி.மு 2500 ஆண்டளவில் இரட்டைத் திமில் ஒட்டகம் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டது. இதனை பாக்ட்ரிய ஒட்டகம் என்றும் அழைப்பர்.