சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
செம்பருந்து (Brahminy Kite) |
செம்பருந்து (Brahminy Kite)![]() ஆங்கிலப் பெயர்: Brahminy Kite உயிரியல் பெயர்: Haliastur indus இந்த பறவை இந்திய துணைக்கண்டம், தென் கிழக்காசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும்.இதைப் போன்ற பருந்து வகைகள் இந்தியா, இலங்கை, பாக்கித்தான், வங்காளம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும். இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். நன்கு வளர்ந்த பறவையின் உடல் செம்பழுப்பு (chestnut brown) நிறத்தில் இருக்கும். இளம் பறவைகள் உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இளம் பறவைகள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது நம் நாட்டில் பரவலாக காணப்படும் மற்றொரு பருந்து வகையான கள்ளப் பருந்து (Black kite) போன்றே இருக்கும். ஆனால் இவற்றின் வால்களின் வடிவத்தை வைடதது நாம் வித்தியாசம் கண்டு கொள்ளலாம். கள்ளப் பருந்தின் வால் சிறிது பிளவு பட்டதாக இருக்கும். செம்பருந்தின் வால் பிளவு இல்லாமல் அரை வட்டமாக இருக்கும். ஆண் பெண் பறவைகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருக்காது. பெரும்பாலும் இப்பறவை இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் காணப்படும். மற்ற பருந்துகளைப் போலவே சிறகுகளை அவ்வப்போது அடித்துக் கொண்டு கிளைடிங் முறையிலேயே பறக்கும். மீன்களை நீர் நிலைக்குள் சரேலென்று பாய்ந்து வேட்டையாடிப் பிடிக்கும். பிடித்த உணவை உயரமான மரக்கிளையிலோ சிறிய மணல் மேட்டிலோ அமர்ந்து உண்ணும். மீன் பிடிப்பவர்கள் விட்டுச் சென்ற இறந்த மீன்களையும் உண்ணும். நீர் நிலை அல்லாத இடங்களில் சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்ணும். இந்தப் பறவையின் இனப்பெருக்கக் காலம் பொதுவாக டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரை ஆகும். மரங்களின் உச்சியில் சிறு கிளைகளாலும் குச்சிகளாலும் தனது கூட்டினைக் கட்டும். பெரும்பாலும் இரண்டு முட்டைகள் இடும். இந்த முட்டைகள் 52x41 மிமீ அளவுடன் வெள்ளை அல்லது நீலம் கலந்து நீள்வட்ட வடிவில் இருக்கும். ஆண், பெண் ஆகிய இரண்டு பறவையுமே கூடு கட்டும். பெண் பறவை மட்டும் அடைகாக்கும். அடைகாக்கும் காலம் சுமார் 26 முதல் 27 நாட்கள் வரை இருக்கும். ![]() இப்பறவைகள் பெரிய மற்றும் தனிமையான மரங்களில் கூட்டமாக தங்குகின்றன. ஒரே இடத்தில் 600 பறவைகள் வரையிலும் கூட வசிப்பது உண்டு. தம்மை விடப் பெரிய வேட்டைப் பறவைகளை கூட்டமாகத் தாக்குவதும் உண்டு. கருடன் என்ற பெயருடைய செம்பருந்து ஒன்றை இந்துக்கள் கடவுளாகவும், திருமாலின் வாகனமாகவும் வழிபடுகின்றனர். அதனால் இதற்கு கருடன், கிருஷ்ண பருந்து என்ற மற்ற பெயர்களும் உண்டு. இந்தோனேசியாவில் இப்பறவை Elang Bondol என அழைக்கப்படுகிறது. அங்கு இப்பறவையை அதிர்ஷ்டத்தை தரும் பறவையாக மக்கள் நம்புகின்றனர். அந்நாட்டின் தலைகரான ஜகார்த்தாவின் அதிகாரப்பூர்வச் சின்னமாகவும் இப்பறவை அறியப்படுகிறது. மலேசியாவின் ‘லங்காவி தீவு’ இப்பறவையின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் காணப்படும் இப்பறவை ‘சிவப்பு முதுகுடைய கடல் கழுகு’ என்று அழைக்கப்படுகிறது. |